யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை
மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல்
ஆக்கும் பணியைத் தொடர https://seebooks4u.blogspot.com/ தளத்தை ஆக்கினேன். தமிழ் மின்நூல்
வெளியீட்டுப் பணியில் பயனுள்ள மின்நூல்களை வெளியிடுவதன் மூலமே தமிழ் பேசும் உலகெங்கும்
வரவேற்பைப் பெறலாம். அந்த வகையில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளை மூன்று
வகைப்படுத்தி உள்ளேன்.
முதலாம் பகுதி
உலகெங்கும் நற்றமிழை பேணவும்
தமிழர் அடையாளங்களை நிறுவவும் நல்லறிவைப் பகிரவும் எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும்
என்ற நோக்கில் முதலாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை
உங்களுடன் பகிருகிறேன்.
1. உலகில் தமிழ்
மொழியே முதலில் தோன்றியது
தமிழ் மொழியே உலகில் முதலில் தோன்றியது என்பதை வெளிப்படுத்தும்
பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். குமரிக்கண்டம் பற்றிய வரலாறு மட்டுமல்ல பிற சான்றுகளும்
தமிழ் மொழியே உலகில் முதலில் தோன்றியது என்பதை உறுதிப்படுத்த உதவலாம். உங்கள் ஆய்வுக்குட்பட்ட
தகவலைத் தொகுத்துச் சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
2. செம்மொழியாம்
எங்கள் தமிழ்மொழி
தமிழ் மொழி ஒரு செம்மொழி எனச் சான்று பகிரும் பதிவுகளை
இம்மின்நூலில் இணைக்கலாம். எந்தவொரு மொழியும் செம்மொழியாக இருக்கச் சிறப்புத் தகுதி
வேண்டும். அவற்றை விளக்குவதோடு மற்றைய மொழிகளை விடத் தமிழ் மொழியின் சிறப்பைப் பகிர
உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
3. உலகெங்கும் தமிழ்
புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றுகள்
தமிழ் பயன்பாட்டில் இருந்த நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட
சான்றுகளைப் பகிரும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம்.
இரஷ்யா அரச மாளிகையில் தமிழ் பொறிக்கப்பட்டுள்ளதாம்.
சில நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் உண்டு. மொறிசியஸ் தமிழர் நாடு; அங்குள்ளவர்கள் தமிழ்
மொழியை மறந்தமையால் அதன் அடையாளத்தை இழந்துள்ளது. இவ்வாறான தகவலைத் திரட்டித் தொகுத்துச்
சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
4. தமிழர் பண்பாடுகள்
மற்றும் விழாக்கள் (பண்டிகைகள்) படிப்பிப்பது என்ன?
தமிழர் பண்பாடுகள் மற்றும் விழாக்கள் (பண்டிகைகள்)
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டோடு தான் பிணைந்துள்ளது. ஒரு பாடத்தையோ ஒரு வழிகாட்டலையோ
அவை சுட்டி நிற்கத் தவறவில்லை. இவற்றைத் தொடர்புபடுத்திப் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
5. பிறமொழிச் சொல்களை
நீக்கி நற்றமிழ் பேணப் படிப்போம்.
சொல் வளம் பெருகின் மொழி
வளம் சிறக்கும். பிறமொழிச் சொல்களை நீக்கித் தமிழ்மொழிச்
சொல்களைப் பேணினால் நற்றமிழ் பேணலாம். அதற்கு உதவும் பதிவுகளை
ஆக்கி இணைக்கலாம்.
இரண்டாம் பகுதி
கணினி வழி, இணைய வழி உலகெங்கும் நற்றமிழை பேண மற்றும் வலைப்பதிவர்கள்/ படைப்பாளிகள் பயிற்சி பெற எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இரண்டாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை உங்களுடன் பகிருகிறேன்.
1. கணினி மென்பொருள்
ஊடாகத் தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி?
கணினி மொழி பற்றிய அறிவோடு தமிழைப் பரப்பிப் பேணுவதெப்படி என்பதை
வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை,
திருக்குறள் போன்ற இலக்கியங்களை மட்டுமல்ல தமிழ் இலக்கணத்தையும் கூட மென்பொருள் ஆக்கலாம்.
அவற்றை எந்தக் கணினி மொழியில் எப்படி ஆக்கலாம் என்பதை நீங்களும் வழிகாட்டலாம். இது
பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
2. இணைய வழி ஊடாகத் தமிழைப்
பரப்பிப் பேணுவதெப்படி?
இணைய மொழி, வலைப்பக்கங்கள் பற்றிய அறிவோடு தமிழைப் பரப்பிப்
பேணுவதெப்படி என்பதை வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். இணைய மொழியும்
வலைப்பக்கங்களும், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் எதனூடாகவும் தமிழைப் பரப்பிப் பேண
நீங்களும் வழிகாட்டலாம். இது பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
3. இசைப் (திரைப்) பாடல்கள்
எழுதுவது எப்படி?
எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணி (சரணம்), இசை
வகை (ராகம்), இசைத் தன்மை
(தாளம்), இசைக் கூட்டு (மெட்டு)
ஆகியவற்றோடு இசைப் (திரைப்) பாடல்
எழுதப் பயிற்றுவிக்கும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம். உங்கள் பதிவைப் படித்ததும்
எவரும் எளிதில் இசைப் (திரைப்)
பாடல் புனைய முடிந்தால், அதுவே
உங்கள் பதிவின் வெற்றி. அதற்கு
உதவும் பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
மூன்றாம் பகுதி
தமிழர் நோயின்றி நெடுநாள்
வாழ, தன்னம்பிக்கையோடு ஒற்றுமையாக வாழ எமது மின்நூல்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்
மூன்றாம் பகுதி மின்நூல்களை வெளியிட எண்ணினேன். அவற்றில் சில தலைப்புகளை உங்களுடன்
பகிருகிறேன்.
1. நெடுநாள் வாழ உதவும் வழிகாட்டலும் மதியுரையும்
தமிழர் நோயின்றி நெடுநாள்
வாழ உதவும் வழிகாட்டலையும் மதியுரையையும் வெளிப்படுத்தும் பதிவுகளை இம்மின்நூலில் இணைக்கலாம்.
தன் (சுய) மருத்துவம் வேண்டாம்; தன்னம்பிக்கையோடு தன் (சுய) முன்னேற்றமே வேண்டும் என
நீங்களும் வழிகாட்டலாம். இது பற்றிய சிறந்த பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
2. ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் இரு கண்கள்
தமிழர் ஒற்றுமையோடும்
தன்னம்பிக்கையோடும் தலைநிமிர்ந்து வாழ உதவும் தன் (சுய) முன்னேற்றப் பதிவுகளை இம்மின்நூலில்
இணைக்கலாம். பிறர் ஒத்துழைப்புத் தேவை; பிறர் ஒத்துழைப்பில் தங்கியிருப்பது தேவையற்றது
எனவும் சொந்தக் காலில் நின்றுகொண்டு முன்னேற நீங்களும் வழிகாட்டலாம். அதற்கு உதவும்
பதிவுகளை ஆக்கி இணைக்கலாம்.
முதற் கட்டமாகப்
பத்து மின்நூல்களுக்கான தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்; மிகுதி விரைவில் இணைப்போம்.
இவ்வாறு பலநூறு மின்நூல்களை வெளியிட்டு, இணையக் களஞ்சியத்தில் பேணி, உலகெங்கும் பகிருவதே
எமது பணி. இப்பணிக்கு உலகளாவிய தமிழ் அறிஞர்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்.
இப்பதிவைப்
படித்த பின், தங்கள் சிறந்த பதிவுகளை இணைத்து உதவுங்கள். எமது
https://seebooks4u.blogspot.com/ தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளைக் கவனித்து எமது
மின்நூல் வெளியீடுகளில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த அறிஞர்களிடம்
இத்தகவலைத் தெரிவித்து, அவர்களது சிறந்த பதிவுகளையும் எமது மின்நூல்களில் இடம்பெறச்
செய்ய உதவுங்கள்.