Translate Tamil to any languages.

வியாழன், 25 செப்டம்பர், 2025

யாழ்ப்பாவாணன் எண்ணங்கள்


1

கடவுளைக் கண்டீரா? என்று

எல்லோரும் கேட்கின்றனர்!

கடவுள்
மனித வடிவில் தான் வருவாராம்!
நான் சொன்னால்
யாரும் நம்புவதாயில்லை!
தானே கடவுள் என - மனிதன்
நடிக்கப் புறப்பட்டதால் தான்
என் பேச்சு எடுபடவில்லைப் போலும்!

2
வாழத் துணிந்து விட்டால்
வருகின்ற திறனாய்வு (விமர்சனம்) எதற்கும்
முகம் கொடுக்கத் தயாராகவே
இருக்க வேண்டும் பாரும்!
எவரும் தூற்றலாம் காறித் துப்பலாம்
குறைகள் கூறித் திரியலாம்
பழித்து நெழித்து நையாண்டி செய்யலாம்
எதற்கும் எவரையும் பகைக்காமல்
நம்குறையைச் சரி செய்து
நல்லவற்றைக் கருத்தில் எடுத்து
நமது வாழ்வைத் தொடர்ந்தால் போதுமே!
நம்மை நாம் எடைபோட்டு
எம்மைத் திருத்திக் கொண்டால்
எவரும் எம்மை எடைபோட்டு
திறனாய்வு (விமர்சனம்) செய்ய இடமிருக்காதே!

3
கையும் மெய்யுமாய் களவு பிடிபட்டது!
எப்படி? எப்படி?
என்னைத் தூற்றியோர் எவரும்
மக்களும் நானும்
ஒன்றாய் இருக்கின்ற வேளை
முகம் காட்ட முடியாமல்
ஓடி ஒதுங்கியே மறைந்தனர்?
ஏன் காணும்? ஏன் காணும்?
உண்மை பேசி உதவி இருந்தால்
மக்கள் முன்னிலையில்
என்னுடன் தாங்களும் இணைந்து இருக்கலாமே!
கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்கு என்பதும்
பலநாட் கள்ளர் ஒருநாள் பிடிபடுவர்
என்பதும் கூட
நேரில் தலையைக் காட்டா விட்டால்
கையும் மெய்யுமாய் களவு பிடிபடுமே!

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

காவோலை விழக் குருத்தோலை சிரிக்கலாமா?



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(கொன்றை வேந்தன் - ஔவையார்)
என்போரின் நடவடிக்கையே உயர்வானது.
உலகம் போற்ற மாற்றாருக்கு முன்மாதிரியாக
அம்மை, அப்பன் மீது
அளவு கடந்த பற்று வைத்து
உயிர் பிரியும் வரை உறவாடி
அம்மை, அப்பனைப் பேணி வருவோரே
உண்மையான பிள்ளைச் செல்வங்கள்!

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
(20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி 
மற்றும் பின்னரான இளசுகள்)
என்போரின் நடவடிக்கையே கீழ்த்தரமானது.
பிள்ளைகளைச் சுமந்த பெற்றோரை
மெள்ளச் சுமக்க முடியாமலே
காவோலை விழக்
குருத்தோலை சிரித்தது போலத்தான்
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்
பின்விளைவறியாப
பிள்ளைகளின் செயற்பாடு  கேடிலும் கேடு!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

திங்கள், 15 செப்டம்பர், 2025

எப்பவேனும் எவரும் தேவைப்படலாம்


எவரெவரோ எதிர்பாராமல் தான்
என்னைச் சந்தித்தனர், பழகினர்...
என்னைக் கெட்டவர் என்று
விலகியோர் சிலர் இருக்கலாம்!
என்னை நல்லவர் என்று
தொடருவோர் சிலர் இருக்கலாம்!
பிரிந்தவர் எவரும் - எனக்கு
எதிரிகள் அல்லர் - ஏதோ
ஒன்றைப் படிப்பித்துச் சென்றவர்!
தொடரும் உறவுகளில்
நம்பிக்கையானவரும் இருப்பர்...
நடிகர்களும் இருப்பர்...
நான் சந்திக்கும் நேருக்கடி நேரம்
நம்பிக்கையானவர்களை இனங்காண்பேன்!
என்னைச் சூழ எத்தனையோ  ஆள்கள்
எந்த வேளை ஆயினும்
எவரும் தேவைப்படலாம் - அதற்காக
எனது எதிர்பார்ப்புக்கு ஒத்துப்போகும்
ஆள்களை அரவணைத்துச் செல்கிறேன்!
நான் செத்தாலும்
என் பிணத்தைக் கூட
சுடுகாட்டிற்குக் காவிச் செல்ல
நாலாள் தேவை என்றுணர்ந்தே
எவரையும் முறித்துக் கொள்ளாமல்
ஓடும் பழமுமாக ஒட்டிக்கொள்ளா விட்டாலும்
எல்லோருடனும் உறவைப் பேணுகிறேன்!
குமுகாயத்திற்கு (சமூகத்திற்கு)
நானில்லாத போது
இன்னொருவர் இருக்கக்கூடும் - எனக்கோ
குமுகாயம் (சமூகம்) எப்பவும் தேவையே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)