Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 மே, 2022

இலங்கை எங்கும் தான்தீ பரவிற்றே!

 அனுமனின் வாலில் யாரோ தீவைக்க

அனுமனோ இலங்கை எங்கும் தான்

தன்வாலால் தொட்டுத் தொட்டுத் தீமூட்டினான்.

சிங்கள மக்களோ அமைதிவழி போராட

மகிந்தரோ அடக்க முனையத் தான்

இலங்கை எங்கும் தான்தீ பரவிற்றே!

                                            (வசன கவிதை போன்று)

பிள்ளையையும் கிள்ளிவிட்டிட்டு

தொட்டிலையும் ஆட்டிவிட்டால்

பிள்ளை நித்திரை கொள்ளுமோ?

09-05-2022 கொழும்புச் சூழலைப் பார்த்த

உலகாளும் கடவுள்

சிங்கள அரசியல் தலைவர்களையா

போராடும் சிங்கள மக்களையா

பார்த்துக் கேட்டிருப்பார்

யாராவது அறிந்திருந்தால்

எல்லோருக்கும் பகிர்ந்து உதவலாமே!

                                          (வசன கவிதை போன்று)



சிங்கள மக்களின் வாக்கினைப் பெற்ற

தனிச் சிங்களத் தலைவர்களே!

சிங்கள மக்களின் விருப்பினை

கேட்டறியாத சிங்களத் தலைவர்களே!

போராடும் சிங்கள மக்களை

போராடாமல் ஒதுங்கிச் செல்ல

படைப்பலத்தைக் காட்டலாமோ?

அடுத்த ஆண்டு அடுத்த தேர்தலில்

யாருக்கு வாக்குப் போடுவதென

மக்களுக்கு அச்சமூட்டி அறிவூட்டினீரோ?

அடுத்த ஆண்டு அடுத்த தேர்தலில்

உங்கள் நிலைமை என்னவாகுமென

பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

                                         (வசன கவிதை போன்று)

 

நற்பதவி தானுயரத் தான்பணிவு தானுணரா

எப்பதவி  யில்இருந்தும் வீண்

                                 (இரு விகற்பக் குறள் வெண்பா)

 

பதவிதான் உயரலாம் கண்டியளோ

பணிவுதான் வரவேணும் என்பார்

பணிவுக்கே இடம் இல்லையா

பதவியில் இருக்க இயலாதே

                           (தன்முனைக் கவிதை)

 

மக்களின் வாக்குகளைப் பெறும் போது

மக்களின் கால்களில் விழுந்து கும்பிட்டாங்க…

நாடாளுமன்ற நாற்காலியில் இருக்கும் போது

மக்களின் விருப்புகளைக் கேட்டு அறியல…

மக்கள் எழுச்சியைக் கூடத் தான்

சிறு குழு முயற்சி என்றார்களே…

ஏவலாளிகளை ஏவிவிட்டுத் தான்

மக்கள் எழுச்சியை  முடக்கத் தான்

முயன்ற பின்னர் தான் கண்டனரோ

மக்கள் எழுச்சிக்குள்ளே

தாங்கள் தான் மூழ்குவோமென்று!

                                          (வசன கவிதை போன்று)


பெரும்பான்மை இனத்தவர்கள்

தமது பக்கம்

தவறில்லையெனக் காட்ட

சிறுபான்மை இனத்தவர் மீது

(வடகிழக்கார், மலையகத்தார், முஸ்லிம்களென)

தங்கள் வன்முறையைத் திருப்பிவிடுவது

அமைதியான, ஐக்கிய இலங்கையை

கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது!

காலிமுகத்திடலில் தொட்டு

நாடெங்கும் வன்முறையைத் தூண்டுவதும்

அமைதியான, ஐக்கிய இலங்கையை

கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது!

வன்முறைகளைத் தூண்டாது

அமைதியான முறையில் தான்

வளம்மிக்க, அமைதியான

ஐக்கிய இலங்கையை உருவாக்க

சிங்கள மக்களின் உளப்பாங்கு

மாறவேண்டும் - அப்பதான்

காலிமுகத்திடலில் எழுச்சி வெல்லும்!

                                          (வசன கவிதை போன்று)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!