Translate Tamil to any languages.

திங்கள், 28 ஜனவரி, 2019

படம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல...


இலக்கணத்தைக் கவனிக்காது நானெழுதும் பாக்கள்
எனக்கு இனிக்கத் தான் செய்கிறது.
இலக்கணத்தைக் கவனித்து நானெழுதினால் தானாம்
நானெழுதியது பாக்கள் தானெனக் கவனிப்பினமாம்!

எனது முயற்சிகளைத் தங்களுடன் பகிருகிறேன்.
தங்களுக்குமிவை சுவையாக இருப்பின்
மகிழ்வேன் நானே!


இலக்கணம் கவனிக்காது நேரடியாக நானெழுதிய பாவிது.

தெருவில  விபத்தால் மனிதன் சாகத்துடிக்க - அதே
தெருவால வந்தவர் நடைபேசியால படம்பிடிக்க
விபத்தில் சிக்கியவர் சாவு!

1 புதுக்கவிதை

தெருவில தான் விபத்தில தான்
மனிதன் தான் சாகத்துடிக்கிறான் பார்
அந்தத் தெருவால தான் வந்தவர் தான்
தன் நடைபேசியால தான் படம்பிடிக்கிறான் பார்
விபத்தில சிக்கியவர் தான் சாவுற்றான் பார்!

2 துளிப்பா (ஹைக்கூ/ஐக்கூ)

தெரு விபத்தில மனிதர்
சாகத் துடிப்பதையே பார்க்கிறோம்.
படம் பிடிக்கவும் ஒருவர்...


3 இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ)

விபத்தில ஒரு மனிதர்
தெருவில சாகத் துடிக்கிறாராம்.
படம் எடுக்கவும் மனிதர்

4 மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)

விரைவாயோடும் ஊர்திகளும் தெருவிலோ அதிகம்.
விபத்துகளால் சாகும்மனிதரோ தெருவில்தான் அதிகம்.
தெருவால போக்குவரவு செய்வோருக்கோ வேடிக்கை.
விபத்தில்சிக்கிச் சாவோரைப் படம்பிடிப்போரும் வாடிக்கை.

5 குறும்பா (லிமரிக்)

தெருவிலதான்  விபத்துத்தான் நாடு
தெருச்சாவாம்  மலிவாச்சுப் பாடு
           சாகத்தான் துடிப்போரைய்
           சாகவிட நினைப்போரைய்
தெருவில்பார் படமெடுப்பார் கேடு

6 இரு விகற்பக் குறள் வெண்பா

தெருவிபத்தில் சாகத்து டிக்கிறதும் நல்மனிதர்
தீயவர்பெற் றப்படமே வேட்டு.

7 இணைக்குறள் ஆசிரியப்பா

தெருவில  மனிதனே விபத்தில்  சிக்கினால்
தெரியுமே அவர்படும்
துடிக்கிற துடிப்பு
சாகவே துடிக்கிற மாதிரி
இருக்கும் போதும் தீயோர்
எடுப்பரே நடைப்பே சிப்படம் தெருவிலே!

8 நேரிசை ஆசிரியப்பா

தெருவில விபத்தில மனிதன் சிக்கலாம்
விபத்தில் சிக்கிச் சாகலாம்
நடைபே சியாலதைப் படம்பிடிக் கிறாங்களே!

9 பல விகற்ப இன்னிசை வெண்பா

தெருவில்தா  னந்தவிபத் தில்மனிதர் சாவாரோ
அத்தெருவில் வந்தவர்தான் தன்நடைபே சிக்குள்ளே
அவ்விபத்தில் சிக்கியவர் சாவதைப்ப டம்பிடிக்க
உள்ளம்தான் நாடுந்தான் கெட்டு.

10 தரவு கொச்சகக் கலிப்பா

தெருவிலதான் விபத்திலதான் மனிதர்தான் உடன்சாக
தெருவால வரும்போவோர் திறன்பேசிப் பயனாக
விபத்திலதான் முடங்கியவர் எழமுடியா தவர்சாக
விபத்தால நடந்ததையே படமாக்கும்  முடவர்தாம்!

11 குறளடி வஞ்சிப்பா

தெருவோரமா விபத்திலவிழ
மனிதரவரே முடியும்கதை
படமெடுக்கிற முடவருக்கென
திறன்பேசியாம்
உயிரைக் காக்கவே உதவா தார்யார்
தன்னுயிர் நிறுத்தம் வந்திட அறிவார்!


குறிப்பு: நான் வெளியிடவுள்ள "அலைகள் ஓய்வதில்லை!" என்ற அச்சடித்த கவிதைப் பொத்தகத்தில் இடம் பிடித்த கவிதை வகைகளின் தொகுப்பே இவை.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!