செல்லமாகத் தடவிச் செல்லும் காற்று
மெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று
என் பாட்டைக் காவிச் சென்றது நேற்று
என் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில்
உன் பாட்டில் சுவை இல்லையெனச் சாற்றினாள்!
பாட்டின் புனைவில் சுவையா சுட்டிக் காட்டு
பாட்டின் பொருளில் சுவையா சுட்டிக் காட்டு
பாட்டின் இசையில் சுவையா சுட்டிக் காட்டு
பாடியவர் குரலில் சுவையா சுட்டிக் காட்டு
என்றதுமே சென்றாள் மீளமீள எழுதிக் காட்டென!
பாப்புனைய விரும்பின் மீளமீள எழுதிப் பாடு
பாவலராக விரும்பின் இசையோடு காற்றினில் பாடு
காற்றினில் வருமுன் பாட்டில் சுவை நாடும்
என் உள்ளம் இழகினால் உன்னைத் தேடும்
என்றதுமே எழுதியெழுதிப் பாவலராக வில்லையே!
நல்ல கவிதை
இலக்கணம் கலந்த கவிதை
தைத்த ஆடை போலப் போட்டால் (படித்தால்)
அழகாகத் தான் இருக்குமே!
இலக்கணம் கலக்காத கவிதை
தெருக்கடையில வேண்டிப் போட்ட
அளவில்லாத ஆடை போல
அழகில்லாத/ அமைப்பில்லாத கவிதையே!
கவிதைத் திறம் வெளிப்பட
கற்பனை, கவியாக்கத்
திறன் போதாது
சற்றுத் தமிழ் இலக்கணம் கலந்தேனும்
வெளிப்படுத்தினால் தானே
நல்ல கவிதைகளை இனம் காணமுடியுமே!
எழுத்துக்குப் பெறுமதி வேண்டும்!
எவரும் தம்மைப் பற்றித் தான்
எப்படியும் எழுதலாம் தான்!
எவரும் அடுத்தவரைப் பற்றித் தான்
அடுத்தவரின் ஒப்புதல் இன்றித் தான்
எதையும் எழுதத் தான் இயலாதே!
அடுத்தவரைப் பற்றித் தான்
அடுத்தவரின் ஒப்புதல் இன்றித் தான்
அடுக்கடுக்காக எழுதி எழுதித் தான்
தன்னைப் பற்றிய எதனையும் தான்
மூடி மறைக்கத் தான் இயலாதே!
எழுதுகோல் ஏந்தியோரே! - கொஞ்சம்
அடுத்தவரைத் தான் புண்படுத்தாமலே
தாங்களே தங்களைப் பற்றித் தான்
தாங்கள் விரும்பியவாறு எழுதலாமென
என் திறனாய்வு சொல்கிறதே!
எவரைப் பற்றியும் எதையும் எழுதாமல்
என்னைப் பற்றியே நான் எழுதுவதே
எவருடைய தாக்குரையைத் தானும் - நானும்
வேண்டிப் புண்படாமல் இருக்கவே!
பரவாயில்லையே! - நாம்
நல்ல சூழலைக் கட்டியெழுப்பத் தான்
நமது நல்லறிவை பரப்பித் தான்
நற்றமிழில் நல்லெண்ணங்களையே
எழுதி வெளியிடலாம் வாங்க!
நாங்கள் எழுதி வெளியிடுவது
நல்லெண்ணங்களாக இருந்தால் மட்டுமே
நமது எழுத்துக்குப் பெறுமதி உண்டென்பேன்!
எவருக்கு ஒறுப்பு
வழங்க?
காளை விருப்புக்கு இணங்கிய வாலையோ
வாலை விருப்புக்கு இணங்கிய காளையோ
இருட்டு அறைக்குள் கருவுற்ற படைப்பிதுவோ
திருட்டு வழியாகக் குப்பையிலே சேர்ந்ததுவோ
எவர் தவறில் பிறந்த குழந்தையிதுவோ
எவருக்கு எவர் ஒறுப்பு வழங்குவாரோ?
என்னால் மறக்க இயலாதவை!
இறக்கும் வரை மறக்க இயலாதது
பிறந்த நாள் தொட்டு அன்பாக வளர்த்த
அம்மாவைத் தான்!
மறக்க நினைத்தாலும் மறக்க இயலாதது
பிறந்த பின்னே அள்ளி அணைத்து அறிவூட்டிய
அப்பாவைத் தான்!
மறந்தாலும் எப்பவும் மறக்க இயலாதது
பள்ளிக்கூட வாழ்வும் எனக்குப் படிப்பித்தோருமான
அறிஞர்களைத் தான்!
மறக்க எண்ணினாலும் மறக்க இயலாதது
எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியும் ஊக்கமுமளித்த
அன்பானவர்களைத் தான்!
மறக்கப் பார்த்தாலும் மறக்க இயலாதது
இளமையில் என்னுள்ளத்தில் இடம் பிடித்த
கண்ணகிகளைத் தான்!
மறக்க விரும்பினும் மறக்க இயலாதது
வாழ்க்கையில் இல்லாளாக உள்ளத்தில் நுழைந்த
துணையாளைத் தான்!
மறக்க வைத்தாலும் மறக்க இயலாதது
ஏதுமற்ற நிலையிலும் தேவையானதை வழங்கியுதவிய
கொடையாளர்களைத் தான்!
மறக்க முயன்றாலும் மறக்க இயலாதது
தோல்விகளிலும் வீழ்ச்சிகளிலும் தோளில் தூக்கிக் காவிய
நண்பர்களைத் தான்!
மறக்கத் துணிந்தாலும் மறக்க இயலாதது
என்னையும் கடுகளவேனும் பொருட்படுத்தி மதிப்பளித்த
பெரியோரைத் தான்!
மறக்கத் தேடினாலும் மறக்க இயலாதது
எனது முயற்சிகளுக்கு இடையூறு வழங்காத
பார்வையாளர்களைத் தான்!
மறக்க நினைத்தாலும் மறக்க இயலாதது
எனது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்ட
எரிச்சல்காரர்களைத் தான்!
கரைகின்ற பொழுதோடு மறைகின்ற வாழ்வில்
மறக்க இயலாத நிகழ்வுகளும் உறவுகளும்
உள்ளத்தில் குந்தியிருப்பதால் சாவின் பின்னும்
உயிரோடு இணைந்து பயணிக்கும் என்பதை
மறக்கத் தான் நாடினாலும் மறக்க இயலாதே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!