Translate Tamil to any languages.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

புதுப்பா (புதுக்கவிதை) புனையலாம் வாருங்கள்!

எழுதுகோல் ஏந்தினால் போல
குவியும் சொல்களும் பாட்டாகுமோ?
பாப்புனையக் கொஞ்சம் படியுங்கோவேன்!
எதுகைக்காகப் புதுவழி தேடினேன்
எதுவாயினும் புதுமுகங்களாகத் தான்
எங்கெங்கும் கண்டேன்! - அங்கே
மோனைக்காக மோகனாவில் மோதினேன்
மோகனாவும் மோதினாள் பதிலுக்கு
மோதியதால் தெருவிலே விழுந்தேன்!
உவமைக்காகக் கொளுக்கட்டை போல
விழுந்ததால் வீங்கியதென் கைதானென
விழுந்ததன் விளைவைச் சொன்னேன்!
எடுத்துக்காட்டுக்குச் சாட்டாக
விழுந்து கிடந்த என்னை
கடவுள் போல வந்தங்கே
தூக்கி நிமிர்த்தினாள் ஊர்வசி!
மேற்கோளுக்குள் காட்டவென ஒன்று
நானென்று பேர்சொல்லி நடைபோடு
ஏனென்று கேட்போரை எடைபோடு!” என்று
பாவரசர் கண்ணதாசன் சொன்னவாறு
என்றும் உதவும் உள்ளங்களே - துணிவோடு
உங்கள் பணியைத் தொடருங்களேன்!
முடிவாகச் சொல்லப் போனால்
பிறருக்கு உதவும் எண்ணம்
எல்லோருக்கும் இல்லைத் தானே!
பாப்புனையக் கவியாக்கத் தேவை
எதுகை, மோனை, உவமையோடு
எடுத்துக்காட்டு, மேற்கோள், முடிவென
சொல்களை எடுத்தாள முயன்றால்
தமிழ்ப்பா புனையலாம் வாருங்கள்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!