Translate Tamil to any languages.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு

வெட்டை வெளி வழியின் இரண்டு ஓரங்களிலும் கறுப்பும் சிவப்புமாக கண்ணைப் பறிக்கும் ஈச்சம் பழமும் காயும் நிறைந்த பற்றை. வாலையொருத்தி அவ்வழியே நடைபோட காற்றோடு மழை வந்து
அவளை மோதியது. குடையை விரித்த வாலை கூப்பிடு தூரம் போயிருப்பாள். நனையாமல் வீடு போக வழியின்றி, ஆங்கொருகாளை தலை நனையாமல் பனை வடலியோலையை வளைத்துப் பிடித்த வண்ணம் நின்றான். நேர்கோட்டில் காற்பெருவிரலை வைத்தவண்ணம் நடைபோட்ட வாலையோ அவனைக் காணவில்லை.

சுறுக்காய் என்னைக் கொஞ்சம் பாருங்களேன்!
நறுக்காய் பகைக்காமல் எனக்கு உதவுங்களேன்!
உன் குடை விரிப்பின் விளிம்புக்குள்ளே
என் தலையைக் கொஞ்சம் நுழைக்கட்டுமா?

காளையின் குரலொன்று காதைக் கிழித்துக்கொண்டு வரும் பக்கம் வாலையும் திரும்பினாள். அவளும் அப்பாவி என்ன தான் செய்வாள். தன் தம்பியோ அண்ணனோ இப்படி நனைந்தால் எப்படியிருக்கும் என
நினைத்தாள்.

எப்படி என்னை எடைபோட்டியோ நானறியேன்
இப்படி நீ பனை வடலிக்குள்ளே ஒதுங்கலாமோ?
எப்ப தான் இந்த மழை ஓயுமோ தெரியேல்லை
இப்படி வாவேன் நீயும் என் குடைக்குள்ளே!

ஏதுமறியாக் காளையின் உள்ளத்திலும் எப்பன் பயம் பொத்திக்கொண்டு வந்தது. வாலையின் அப்பனோ அண்ணனோ தம்பியோ கண்டால், "வாலைக்குத் தொல்லை கொடுத்ததாய்" அடிப்பாங்களென அஞ்சினாலும் மழைக்காகக் குடைக்குள் நுழைந்தேனென்று சொல்லலாமென எப்பன் துணிந்தான்.

உன் முகம் காண மழை வந்து மோதியதோ
என் நிலை கண்டு நீயும் கடவுளாய் வந்தாயோ
உன் உரிமை கிடைத்த பின்னும் ஒதுங்கலாமோ
என் தலைக்குக் குடைபிடிக்கும் உனக்கு நன்றி!

இருவேறு எண்ணங்களைச் சுமந்து கொண்டு தெருவழியே நடைபோட்ட இருவரும் சாட்டுக்கு மழை வந்ததால் தான் ஒரே குடையில் செல்ல
வேண்டியதாயிற்று. பயந்து பயந்து நடைபோட இருவரும் சிறிது தூரம் சென்றாயிற்று.

நரம்பு இல்லாத நாக்கால நன்றியா
நெருங்கி வந்த பின்னால நானார்
வெட்டிப் பேச்சு வேண்டாம் - என்னையே
கூட்டிப் கொண்டு போவேன் உன்னோடு!

அட கடவுளே! இப்படியும் கேட்பாளென நான் நம்பவில்லையே! வீட்டுக்குக் கிட்ட நெருங்க இப்படிக் காதுக்குள்ளே குண்டு வைக்கிறாளே எனக் காளையும் சிந்தித்தான்.

காட்டில கண்டதால குடைக்குள்ளே வந்ததால
மாட்டும் எண்ணத்தில இப்படியும் கேட்கலாமோ
ஏட்டில எழுதினபடி வருவாள் ஒருத்தி
விட்டிட்டுது மழை என்னையும் விட்டுவிடு!

தன்னோடு முட்டாமல், உரசாமல், தடிமன் வராமல் தலையை மட்டும் குடைக்குள் ஓட்டிக் கொண்டு வந்தவனின் ஒழுக்கம் நன்றென்றுணர்ந்த வாலையும் அவனை விட்டபாடில்லை.

கண்ணாடி நிற மழை நீரும்
கால் பட்ட செம்மண்ணும்
சாணுயரத் துள்ளிப் பாயுது செந்நீராய்...
எண்ணிப் பார்த்தும் எட்டிப் போகலாமோ?

வீட்டில கிழங்கள் எனக்குப் பெண் பார்க்கிறது இவளுக்கு எங்கே தெரியப்போகிறது. கண்ட இடத்தில கண்டவளைக் கைப்பிடிப்பது நல்லதும் இல்லை. எல்லாவற்றையும் நினைத்துக் காளையும் குழம்பிப் போகிறான்.

வழியிலே வந்தோம் விழிகளில் நுழைந்தோம்
மழைநீரும் வந்தே செம்மண்ணில் கலந்தாச்சு
உண்மையில் நானும் என்முன்னே நீயும்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு!

குழம்பிய காளையைப் பார்த்து, இதற்கு மேலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் ஏட்டில எழுதினவள் நானென்றால் எப்போ ஒரு நாள் இணைவோம். "எல்லாவற்றுக்கும் முன் எங்கள் உள்ளங்கள் கலந்தாச்சே!" என்று காளையிடம் வாலை விடைபெற்றாள். காளையின் உள்ளத்திலும் வாலை நுழைந்ததான உணர்விருக்க "குடையும் மழைநீரும்
செம்மண்ணும் செந்நீரும்" என்றும் உங்களை நினைவூட்டுமென காளையும் விடைபெற்றான்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)
--------------------------------------------------------------------------------------------
குறிப்பு:தமிழ் நண்பர்களே! இக்கதையின் சுருக்கம் ஓர் சங்க இலக்கியப் பாடலில் இருக்கு. அப்பாடலைக் கீழே தருகின்றேன்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!