Translate Tamil to any languages.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

பட்டிமன்றம்

தெருவோரத்து அரங்கொன்றில்
'கல்லெறியா சொல்லெறியா' என்று
பட்டிமன்ற நிகழ்வைப் பார்த்துக் கேட்டேன்.

காய்க்கிற மாவுக்குக் கல்லெறியாம்
தெருச்சுற்றும் மனிதருக்குச் சொல்லெறியாம்
இருதரப்புப் பட்டிமன்றப் பேச்சாளரும்
ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லெறி வீசினர்!

காய்க்கின்ற மாவில காய், கனிகள்
நிறையத் தான் தூங்குமே!
'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என
காய்க்கிற மாவுக்குக் கல்லெறி தானதிகம்!

தெருவால போகிற ஆண்ணென்ன பெண்ணென்ன
உள்ளத்தில் நிறையச் சுமந்து செல்லலாம்!
ஆளுக்காள் அடுத்தவர் தகவல் அறிய
கேள்விக் கணைகளாகச் சொல்லெறி வீசுவரே!

நல்லவரோ நறுக்காகப் பதில் எறிந்தாலும்
கெட்டவரோ கதையளந்து பதில் எறிவாரே!
சொல்லெறிந்தார் ஒதுங்கினாலும் பார்த்தவர் விடமாட்டாரே
ஆளுக்காள் ஆயிரம் கதையளப்பினம் கண்டியளோ!

ஏட்டிக்குப் போட்டியாகப் பட்டிமன்றம் உச்சக்கட்டத்தில்
சொல்லெறியும் பதிலடியும் சுவையான விருந்தாச்சு!
கேட்பவரோ முடிவறியத் துடியாய்த் துடித்தனர்
மொட்டைத்தலை நடுவரோ குட்டை அவிட்டார்!

சுவைதரும் மாங்காய்க்குக் கல்லெறி என்றாலும்
அப்பாவி மாமரத்துக்குத் தான்வலி பாருங்கோ!
குற்றவாளியறியச் சொல்லெறி வீசியோர் இருந்தாலும்
சுற்றியுள்ளவரின் கேலியும் நையாண்டியும் சுவைதானே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)


செவ்வாய், 29 ஜூலை, 2025

நம்பிக்கையும் வாழ்வும்



அப்பா என்ன செய்தாலும

அம்மா என்ன செய்தாலும்
எந்தப் பிள்ளையும் - அதனை
எதிர்க்க முயன்றதில்லை - அது
பெற்றோர் மீது
பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கை!
நண்பர்கள் சிலர் - சிலரை
நம்பிச் செயல்படுவார்கள்!
நம்பியவர்களை நம்பித்தான்
நாணயமாகச் செயற்பட்டவர் தான்
சாகும் வரை நட்பைத் தொடருகின்றனர்!
உள்ளப் பொருத்தம் பேணும் காதலர்கள்
ஒருபோதும் முறிவதில்லை! - அவர்களுக்குள்
நம்பிக்கை ஊற்று எடுக்கும்!
கணவன், மனைவி உறவு
சோதிடப் பொருத்தத்தில் இல்லை - அது
உள்ளப் பொருத்தத்தில் தான் நிலைக்கும்!
உள்ளப் பொருத்தம் ஒற்றுமைக்கு
அன்பு தான் உடல் அணைப்புக்கு
நம்பிக்கை தான் விருப்பங்களை நிறைவேற்ற
கணவன், மனைவிக்கு வேறேது தேவை!
பெற்றவர்கள்
பிள்ளைகளைப் பெற்றால் போதாது;
அன்பு காட்ட வேணும்...
அறிவை ஊட்ட வேணும்...
நம்பிக்கையைப் பேண வேண்டும்!
பெற்றோரின் அன்புக்கும் பற்றுக்கும்
பிள்ளைகள் தாமாகவே கட்டுப்படலாம்...
பெற்றோரில் தான் தங்கியிருப்பதாய்
பிள்ளைகளை வளர்க்கவும் கூடாது
அச்சுறுத்தி, அடக்கிப் பேணவும் கூடாது
பின்நாளில்  - அவை
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே
விரிசலை ஏற்படுத்தும் மருந்தாகலாம்!
நம்பிக்கை என்பது
பேச்சளவில் ஊற்றெடுப்பதில்லை;
செயல்களிலும் ஆற்றுகைகளிலும்
உள்ளம் விரும்புவதால் ஊற்றெடுக்குமே!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

உழைத்துப் பிழைக்க வேண்டும்.



அணிந்து கொள்ள விரும்பும்

ஆடைகளைத் தீர்மானிப்பது நீங்கள்!
நுளம்பு வலை, மீன்பிடி வலை போன்றும்
பொட்டு, பொட்டாக ஓட்டை போட்டதும்
கீறல், கிழிசலாக வெட்டுப் போட்டதும்
நீங்கள் அணிந்து செல்லும் போது
பார்க்கின்ற ஆள்களுக்கு
வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருதே!
திரைப்படங்களில் ஆட்டக்காரிகள்
போட்டுகாட்டி உழைப்பது வேறு!
ஊருக்குள்ள பண்பாட்டைப் பேணும்
உடுப்புகளைப் போடாமல் திரிந்தால்
ஊரே ஒதுக்கிவைத்துப் போடும்!
ஆள் பாதி ஆடை பாதி என்றால்
ஆளை மறைக்க உடுப்பது பாதி
ஆளை மதிக்க உடுப்பது பாதி
என்பதை உறுதிப்படுத்த
ஆடையின்றித் தெருவில் ஓடிய ஒருவருக்கு
ஊரார் சேர்ந்து அடித்து உடைத்துப் போட்டு
சாக்கால போர்த்து விட்டது சான்று!
வீட்டிற்கு உள்ளே விரும்பியவாறு
உண்டும் குடித்தும் உடுத்தும் வாழலாம்!
வீட்டிற்கு வெளியே வந்து இறங்கினால்
ஊரார் போற்றும் கலைப் பண்பாட்டை

ஏற்று - அதற்குக் கட்டுப்பட்டு
உண்டும் குடித்தும் உடுத்தும் உலாவலாம்!
எனது மகிழுந்து, எனது எரிபொருள், எனது தெருவெளி
நான் எப்படியும் ஓட்டுவேன் என்று
எவரும் ஆட்டம் போட முடியாது
தெரு வெளி அரச சொத்து என்றறி!
நான், என்னுடையது எல்லாம்
பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!
நான், என்னுடையது எல்லாவற்றையும்
பொதுவெளிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி
வெளிப்படுத்தி வீர முழக்கம் இடலாம்!
பணிந்தவர் உயர்வார்
உயர உயரப் பணிவு வந்தாலும் உயர்வார்
என்னை விடப் பெரிசு யாரென்று
தலையைக் காட்டினால் பிழைக்க முடியாதே!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

திங்கள், 21 ஜூலை, 2025

கெட்ட பெயர் செத்த பின்னும் நிலைக்கும்

 


அப்பா, அம்மா வைச்ச பெயர்
உயிரழகன் - அதனை
சொல்ல எவருமில்லை! - ஆனால்,
நல்லது செய்தால் இன்னாருடைய பிள்ளை
நல்லது செய்தானென்று
நாலு நாள் கொண்டாட்டம் போடுவாங்க!
ஐந்தாம் நாள் பாரும்
எல்லாம் காற்றிலே போய்விடும்!
எவருமே உயிரழகனைக் கவனிக்க மாட்டாங்க!
கெட்டது செய்தானென்று வைத்துக் கொள்க...
இன்னாருடைய பிள்ளை
கெட்டது செய்தானென்று
உலகெங்கும் பரப்பிப் போடுவாங்க!
பிறந்த நாள் தொடக்கம்
உடலில் ஒட்டிய அடையாளம் போல
(உயிரழகனின் கண்ணுக்குத் தெரியாத
கன்னக்குழி அழகும் கறுப்பு மச்சமும போல)
கெட்டது செய்த செயலாளர் என்று
சுடலையில் பிணம் எரியும் போதும்
ஊர் வாய் பேசும் எவர் தடுப்பார்!
நல்லதைச் செய்தால்
காற்றிலே பறந்து போய்விடும்!
கெட்டதைச் செய்தால்
உடலிலே ஒட்டிக் கிடக்கும் - அதைச் சுட்டி
ஊருலகம் கேலி பண்ணிக் கொண்டிருக்கும்!
ஒரு கோடி ஆண்டு சிந்தித்து
ஒரு முடிவுக்கு வந்தாச்சு - அது
காற்றிலே பறந்து போனாலும்
நல்லதை மட்டும் செய்த செயலாளர் என்ற
பெயரோடு சாகலாம் என்று தான்!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

வெள்ளி, 18 ஜூலை, 2025

மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க



அன்று உணவே மருந்தாகும்!

இன்று மருந்தே உணவாகிறது.
என்று தீரும் 
இந்தச் சிக்கல்?
அரிவரி, தொடக்கக்கல்விக்கு மேலே
பெரிதாக ஏதும் படிக்காத என்னிடம்
மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க
மருந்தொன்று தாவென்று கேட்கிறார்களே!
உண்டது உடலில் ஒட்ட
நாறும் வியர்வை வெளியேறும் வண்ணம்
உடற்பயிற்சி செய்ய வேணுமாம்!
(அது வயாக்கரா மருந்துக்கு ஈடானதாம்!)
இரண்டு (மலம், சலம்) அடக்கிப் பேணாமல்
ஒழுங்காக வேளியேற வைக்க வேணுமாம்!
உடலில் குருதி (கீமோகுளோபின்) வற்றாதிருக்க
கீரைவகைக் கறிகள் உடன் - உப்பில்லா
நன்நீரை நன்றாகக் குடிக்க வேணுமாம்!
தவிடு நீக்காத அரிசியில் சோறாக்கி
உப்பு, புளி, காரம், எண்ணெய் குறைத்து
விரும்பிய கறிகள் காய்ச்சி
(சுருங்கக் கூறின் அவியல் கறி, சோறு)
உண்டது செமிக்க 4 மணி நேரம் விட்டு
மூன்று வேளை கால் வயிறு உண்டு
கால் வயிறு நன்நீர் குடித்தும் தான்
எஞ்சிய வயிற்றில் காற்றுக் குடிகொள்ள
உண்டு வந்தாலும் 8 மணி நேரத் தூக்கத்துடன்
உண்டு களித்து வந்தால் பாரும்
மருத்துவரை நாடவேண்டி வராதாமே!
மருந்தே உணவாகாமல்
உணவே மருந்தாகும் என்ற
கதை, பாட்டு, கட்டுரைகள் எனப் பல
எங்கட மாதகலூர்
மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில்
வாசிக்கக் கிடைத்த பத்திரிகைகளில்
படித்துப் பொறுக்கித் தொகுத்த தகவலையே
சுருக்கிச் சொல்லி இருக்கிறேன்!
உண்ணானத் தான் சொல்கிறேன் - அதற்காக
தங்கட உழைப்பில தான்
மண் அள்ளிப் போட்டிட்டான் என்று
மருத்துவர்கள் என்னைத் திட்டக்கூடாது!

ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)